சினிமா…..சினிமா…..தேர்தல் அறிக்கை....
செய்தித்தாள்களிலும், வார, மாத இதழ்களிலும் சினிமா செய்திகளைத் தவிர போடுவதற்கு வேற செய்திகளே இல்லையா? பத்து, இருபது. முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த சினிமாக்களுக்கு இப்பொழுது பிறந்த நாள்ää நினைவு நாட்கள் கொண்டாடுகிறார்கள். அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரப்போகிறது. புலனாய்வுப் பத்திரிக்கைகள், தேசியம் பேசும் வார, மாத இதழ்கள், சமீபகாலமாக சினிமா கலைஞர்களுக்கு, சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கும் பத்திரிக்கைகள் நிச்சயமாக வரப்போகும் மாதங்களில், தேர்தலுக்கு முன்பாக இந்த கட்சி எம்.எல்.ஏ என்ன செய்தார், தொகுதியில் இவர் செய்த மக்கள் பணிகளுக்காக வெல்வாரா, அவர் சார்ந்த சமூக வாக்குகளைப் பெற்று வெல்வாரா, வாக்குகளை கவர்வதற்காக எந்தவிதமான பிரச்சாரத்தை கையில் எடுத்து மக்களை தன் வசப்படுத்துவார், அவரின் கல்வித் தகுதி என்ன, தற்போதைய சொத்து மதிப்பு என்ன, இதுவரை என்னவாக இருந்தார், இப்படியான செய்திகளை நிச்சயமாகத் தரப்போகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அரசு இயந்திரமானது செயல்பட்டுக்கொண்டுதானிருக்கிறது. எப்படி செயல்பட்டன என்பது தற்போதைய கேள்வி அல்ல, ஏனென்றால் தவறுகளைத் திருத்திக் கொள்வோம் என்ற சொல்வழக்கு இருக்கிறது. மறப்போம் மன்னிப்போம் என்பதை மக்களும் மறக்காமல் இருக்கிறார்கள். திரைப்படங்களே வெளிவரவில்லையென்றாலும், திரைப்படங்ளைப் பற்றி தினசரி எழுதும் பத்திரிக்கைகள், அதைத் தாண்டிய ஒரு செயலை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை, அவர்களின் உழைப்பினை, மக்களுக்கு செய்திடும் சேவைகளை ஏன் இவர்கள் செய்தித்தாள்களில் இடம்பெற செய்யவில்லை. ஒரு நிறுவனத்தின் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் செய்தித்தாள்களில் இடம்பெறுவது போல் ஏன் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதிகள் குறித்தான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை? சட்டமன்ற உறுப்பினர்கள் இவற்றை தரமறுக்கிறார்களா? அல்லது அரசாங்கம் இதற்கு அனுமதி அளிக்கவில்லையா? ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தின்பொழுது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின்பொழுது அவர்களின் சம்பளப்பட்டியலை முதல் பக்கத்தில் பிரசுரித்த நாளிதழ்கள், இதுபோன்ற செயல்களை செய்ய முயற்சி எடுக்காமல் இருப்பது ஏன். மேற்கூறியவர்களின் சம்பளப் பட்டியல் நாளிதழ்களில் வெளிவந்தபிறகுதான் நிறைய பேருக்கு அதுகுறித்தான தகவல்கள் தெரிய வந்தன. இவர்கள் இவ்வளவு மாத ஊதியம் பெறுகிறார்கள் என்பது தெரியவந்தன. இவ்வளவுக்கும் மேலும் இவர்கள் ஊதியத்திற்காக போராடுகிறார்களா என்பன போன்ற சிந்தனைகளும் வந்தன, ஆனால் அது தேவையில்லை. அரசு இவர்களுக்கு அரசு இவ்வளவு மாத ஊதியம் தருகிறார்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்தன. அதுபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதி மக்களுக்காக இவ்வளவு செய்கிறார் என்பது போன்ற தகவல்கள் பார்வைக்கு வர வேண்டும், இதன் மூலம் மக்களும் எந்த விதமான தேவைகளுக்கு நாம் சட்டமன்ற உறுப்பினர்களை அணுகலாம், எந்தவிதமான திட்டங்களை கேட்டுப்பெறலாம் போன்ற புரிதல்கள் பிறக்கும். சினிமா, நடிகர்கள் என்ற செய்திகளை விட்டு வெளியே வந்தால்தான் சமுதாயத்திற்கு சிறிய சிறிய புரிதல்கள் தெரியவரும். இல்லையென்றால்ää அடுத்து அரசு அமைத்தால் எங்களுடைய கட்சி இதைச் செய்யும் என்று தேர்தல் அறிக்கைகள் வந்தால் அரசியல் ஆரோக்கியம் பெறும்.
Comments