அ முதல் அகம் வரை...Part 1


சமீபத்தில், தொலைக்காட்சிகளில் ஒரு விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். அது, காலணிகளுக்கான விளம்பரம். அதில் ஒரு பிரபல நடிகர் தோன்றி,ஒடு... ஒடு... ஒடு... ஒடு, புகழைத்தேடி ஓடு; பணத்தைத் தேடி ஓடு; வெற்றியைத் தேடி ஓடுஎன்பார்.

உண்மையிலேயே இன்றைய கால கட்டத்தில் நமது வாழ்க்கை அப்படித்தான் உள்ளது. நகரமயமாதலில் மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்தால்கூட செலவிற்கு அது போதவில்லை. சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதி வாடகைக்கும்,ஒரு தொகை போக்குவரத்து செலவிற்கும் போய்விடுகிறது. மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்தாலும், நடுத்தர வர்க்கத்தினர் கீழ்த்தட்டு நிலையிலேயே (Lower Middle Class) இருக்க வேண்டியுள்ளது.

இதனால் நாம் கவனிக்காமல் விட்ட விஷயங்கள் என்னென்ன என்று பார்க்க வேண்டும். இதற்கு முன் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், இப்போது நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் அந்த விளம்பரத்தை வைத்து தெரிந்துகொள்ளலாம். .

அதில் சொல்வதுபோல் நாம் ஒடிக் கொண்டிருக்கிறோம்; பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதைக் கொண்டு, நவீன தொழில் நுட்பத்தால் பெருகிவிட்ட கருவிகளை வாங்க ஓடிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, மாதத்திற்கொரு மாடலில் வரும் அலைபேசி, புதிய தொழில் நுட்பத்தினாலான தொலைக்காட்சி பெட்டி, வாஷிங் மெஷின், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவையெல்லாம் நம் வீட்டில் இருந்தால்தான் அந்தஸ்து என முடிவு செய்து, விளம்பரங்களில் பார்க்கும் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் இல்லையென்றால், அது குடும்பமே அல்ல என்றாகி விட்டது. இந்த உலகத்தைப் பார்க்கிறோம்; இதில் கிடைக்கக் கூடிய வாழ்வியல் துணைக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.

முன்பெல்லாம், பணி என்பது 8 மணி நேரமாகவே இருந்தது. இப்பொழுது பெரும்பாலும் தனியார் நிறுவன பணி என்பதால், அது 12 மணி நேரமாகிவிட்டது. இதில், பயண நேரம் குறைந்தது நான்கு மணிநேரம் எடுத்துக் கொள்ளும். மொத்தத்தில்இ பகல் பொழுதில் 16 மணி நேரம் போய்விடுகிறது; தூங்குவதற்கு 8 மணி நேரம். இதில், எங்கிருந்து உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி நினைப்பது..?

நாம், நம்முடைய பாரம்பரியமான வாழ்வியல் முறைகளிலிருந்து மேற்கத்திய கலாச்சரா வாழ்வியலுக்கு மாறிக் கொண்டோம். வாழ்க்கையில், வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை தேடி ஓடுதல் அல்லது அமைத்துக் கொள்ளுதல் என ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஓடிக் கொண்டிருக்கிறோமே... என்றைக்காவது நாம்இ நம் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தித்ததுண்டா..?, மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.

அப்படி ஓடுகிறோமே, ஓடும் கால்கள் உடலில் ஒரு அங்கம் தானே..? உடல் நலமாக இருந்தால்தானே உடல் அங்கங்கள் சிறப்பாகச் செயல்படும்..? நன்றாக ஓடமுடியும்..? ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் உடலில் உயிர் இயக்கம் சிறப்பாக இருக்கும். உடலும் உயிரும் நோய் பாதிப்பின்றி இருப்பதே ஆரோக்கியம். இதையும் தாண்டி மனம் என்று ஒன்று உள்ளது. அதன் நலனும் மிக முக்கியம். இதற்கு நாம் என்ன செய்கிறோம் என்று பார்த்தால், ஒன்றைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அது, உணவு எடுத்துக் கொள்ளுதல் மட்டுமே..! அதுவும் கூட, வயிற்றில் பசி என்று ஒன்று ஏற்படவே... இல்லையென்றால், உணவைக் கூட மறந்து ஒடுவோம்.

ஆனாலும், வேலைக்காக உணவைக்கூட தள்ளிவைத்து விட்டு ஓடுபவர்களும் உள்ளனர். அவர்கள், வேலையை முடித்து விட்டு நேரம் தவறி உணவை எடுத்துக் கொள்வர். அத்துடன், வேலைக்காக உணவைத் தவிர்த்து விடுபவர்களும் உள்ளனர். இதைத் தாண்டி, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் என்ன செய்கிறோம் என்று கேட்டால், அதற்கான பதில் மெளனமே. உடலில் நோய் வந்த பிறகு மருத்துவரைத் தேடி ஒடுகிறோம். அவர் தரும் மருந்துகளை உட்கொள்கிறோம். மீண்டும் ஓடத் தொடங்குகிறோம். மீண்டும் ஆரோக்கியத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. ஆக,ஆரோக்கியம் காத்தல்என்பது உடல் நோய்வாய்ப்பட்ட பின்னர் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக் கொள்வது என்றே புரிந்து வைத்துள்ளோம்.

ஆக மொத்தத்தில், உடல் ஆரோக்கியம் பேணுதல் என்பதை இன்றைய அவசர உலகத்தில் நாம் புறக்கணித்துவிட்டோம். அவற்றை தினசரி வாழ்வில் செயல்படுத்த முடியாத அளவிற்கு நம் சமூகம் சென்றுவிட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் சாதாரண மூட்டு வலி என்று வந்தால் அவருக்கு இரண்டு மூலிகைகளின் பெயரைச் சொல்லி,அவைகளைப் பறித்து பயன்படுத்துங்கள்; இரண்டு நாளில் சரியாகும்என்று சொன்னால், உடனே அவர்,சார், யார் சார் மூலிகைகளைத் தேடிச் செல்வது..? அப்புறம், நீங்கள் சொல்வதுபோல் செய்வதற்கும் நேரம் இல்லை சார்என்பார். ஆக, ஆரோக்கியம் என்பதை வேறு யாரோ ஒருவர் வந்து நமக்கு தயாரித்துத் தரவேண்டும் (Ready Made)என்று நினைக்கிறோம்.

இது ஏன் என்றால், ஆரோக்கியம் என்பது நாம் பேணப்படவேண்டியது என்றில்லாமல், அடுத்தவர் அதை எடுத்து தர வேண்டும் கடையில் பொருள் வாங்குவது போல் என்று, தொழில் சார்ந்த விஷயம் போல் நினைக்கிறோம். வீட்டில் உள்ள மின்விசிறி ஓடவில்லை என்றால், அதற்கென உள்ள மெக்கானிக்கை அழைத்து வந்து சரி செய்வதைப் போல் நினைக்கிறோம். இது ஒருவகையில் சரிதான். ஏனெனில், அனைவரும் மருத்துவர் ஆக முடியாதல்லவா..? ஆனால், நாம் சொல்ல வருவது அதுவல்ல... நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியம் பேணப்பட வேண்டும் என்பதே. இது, நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்தது. இப்போது அது இல்லை என்பதுதான்.

உடலுக்கு எட்டு மணிநேரம் ஓய்வு தேவை. ‘அதான் தூங்குகிறோமே…’ என்பீர்கள். அலைபேசி வந்த பின்னர் அந்த தூக்கமும் குறைந்து விட்டது. காலத்திற்கு தகுந்தாற்போல், உடலுக்கேற்ற உணவை எடுத்துக் கொள்கிறோமா..? மேலே சொன்னதுபோல், மெளனமே பதில்.

அடுத்த இதழில் சந்திப்போம்

K.S.P ஹர்விஸ் வர்ஷன்
K.S.P. HARVISH VARSHAN

About the writer:


Being a chemistry graduate, Harvish Varshan KSP, pursued his interest in the field of Siddha. And his continuous research in siddha enabled him to serve the society with his expertise and experience with his in-depth knowledge about the health. Though in later phase of life, he juggled with his job of database administrator, traning the trainers, he didnt let off his interest in the Siddha. Through his sustained interest, he is now publishing his thoughts of current lifestyle in the newly formed and published adhaan magazine, a monthly publication. 



Comments

Popular posts from this blog

IIT-Madras launches country’s first standing wheelchair

Complex pain relief surgery performed at private hospital

55-year-old man undergoes aortic valve replacement