அ முதல் அகம் வரை...Part 3
நாம் எப்படி தினசரி பல் துலக்குகிறோமோ, எப்படி தினமும் நீராடுகிறோமோ
அது போல் குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது
என்பதை ஆரோக்கியத்தின் முதற்படியாகக் கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு
எப்படி வாகனம் முக்கியமாகிறதோ அது போல் தேக ஆரோக்கியத்திற்கு குடலின் ஆரோக்கியமும்
திறனும் முக்கியமாகிறது.
நாளைக்கு இருமுறை, வாரத்திற்கு இருமுறை,
மாதத்திற்கு இருமுறை, வருடத்திற்கு இருமுறை என
சித்தர் பெருமக்கள் உரைத்திருக்கிறார்கள் இவை அனைத்துமே நமது தேக ஆரோக்கியத்தை காப்பதற்கான
விதி முறைகளாகும். இதில் முதலில் வருடத்திற்கு இருமுறை என்பதைப்
பற்றி பார்ப்போம்.
நாம் பிறந்ததிலிருந்து தொடர்ந்து
இடைவெளி இல்லாமல் அல்லது ஒய்வு தராமல் உணவு எடுத்துக் கொண்டே இருக்கிறோம். உணவு என்பதில் நொறுக்குத் தீனியையும் கணக்கில் சேர்த்தே சொல்கிறேன்.
இதனால் குடலுக்கு ஒய்வு இல்லாமல் போவதோடு குடலும் எப்பொழுது நிறைந்தே
இருக்கிறது. இதனால் இரப்பை, குடல் மற்றும்
பெருங்குடலில் தேவையற்ற கழிவுகளின் தேக்கம் ஏற்பட்டிருக்கும். எனவே இவற்றை சுத்தம் செய்யும் பொருட்டு குறைந்தபட்சமாக வருடத்திற்கு இரண்டு
முறையாவது பேதி ஆவதற்கு மருந்து எடுத்துக் கொள்வது ஆகும். இதனால்
இரைப்பை, குடல் மற்றும் பெருங்குடல் போன்றவை சுத்தம் செய்யப்படும்.
இச்செயல் மிகவும் இன்றியமையாதது. அடுத்ததாக ஒவ்வொரு
வேளை உணவுக்கும் இடையில் போதிய இடைவெளி தருவதன் மூலம் குடலுக்கு சற்று ஒய்வும்
கிடைக்கும். எப்படி எனில் ஒரு வேளை உணவை உட்கொண்ட
பிறகு மறு வேளை உணவிற்கு போதிய இடைவெளி தரவேண்டும். அதாவது அடுத்த
வேளைக்கு பசி எடுத்த பிறகே உண்ண வேண்டும். மேலும் எந்த அளவு உண்ண
வேண்டும் என்றும் சொல்லியுள்ளனர். அதாவது எந்த வேளையானாலும் சரி
அரை வயிறு உணவு கால் வயிறு நீர் மற்றும் கால் வயிறு காலியாக இருக்குமாறு உணவு எடுத்துக்
கொள்ள வேண்டும். இதுவே சரியான முறையாகும். ஆனால் நாம் இப்படித்தான் செய்கிறோமா? என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவை தவிர குடல்
ஒய்வு மற்றும் ஆரோக்கியத்திற்கென்று பார்த்தால், நம் முன்னோர்கள்
கடவுளின் பெயரால் வாரத்திற்கு ஒரு நாள் முழு உபவாசமோ அல்லது ஒரு பொழுது என்று ஒரு வேளை
மட்டும் உணவு கொள்ளும் வழிமுறையையோ கடைபிடித்தனர். இவற்றை நம்முள் பலரும் இன்று கடைபிடிப்பதில்லை.
இவ்வாறாக குடலுக்கு ஓய்வு, செரிமான உறுப்புக்கள்
அனைத்தையும் சுத்தம் செய்தல் என ஆரோக்கியம் காத்தல், குடலை வலுவாகவும்
அதன் செயல் திறன் குன்றாமலும் பார்த்துக் கொள்வதுமான செயலையே ஆரோக்கியத்தின் முதல்
படியாகக் கொள்ளலாம். அடுத்து நாளைக்கு இருமுறை என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக இதற்கு இரு பொருள் தருவோர் உள்ளனர். அதாவது நாளைக்கு இருமுறை என்றால் ஒரு நாளைக்கு
இருமுறை மலம் கழிக்க வேண்டும் என்போரும், இல்லையில்லை, நாளைக்கு இருமுறை என்றால் ஒரு
நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்போரும் உள்ளனர். இந்த இரண்டு கருத்துமே
ஏற்புடையதே.
இன்றைய சூழலில் உலகிலேயே இந்தியாவில் நீரிழிவு
நோய் உள்ளவர்கள் மிக அதிகம். அபரிமிதமான உணவு, குடலில் செயல்பாடுகளை பாதிக்கச் செய்யும்
உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் குறைந்த
உடல் உழைப்பு போன்றவை நீரிழிவு நோய்க்கு காரணங்களாக காட்டப்படுவதால் இரண்டாவது கருத்தையும்
நாம் ஆமோதிக்கலாம்.
நீரிழிவு நோய் வந்த பின் மருத்துவர்கள் மாவுச்சத்து
குறைந்த உணவை பரிந்துரைப்பதோடு மூன்று வேளை உணவை பிரித்து ஆறு வேளையாக உண்ணச் சொல்வது
நீரிழிவு நோயாளிகள் அனைவரும் அறிந்ததே. நல்ல ஆரோக்கியமான உடல், பலவீனமில்லாத நிலையில்;
கடின உடல் உழைப்பு தருவோர் தவிர்த்து ஏனையோர் ஒரு நாளைக்கு இருவேளை மட்டும் உணவு கொள்வது
உத்தமமே.
அடுத்து மூன்றாவதாக வாரத்திற்கு இருமுறை
என்பதைப் பற்றிப் பார்ப்போம். இந்த உடல் தன் பணிகளை சரிவர செய்வதற்கும், உடலில் உயிர்
இயக்கம் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கும் இந்த உடலால் பராமரிக்கப்படுகிற உடல் வெப்பம்
மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். மனிதனின் சாரசரி உடல் வெப்பநிலை 98.6 பாரன்ஹீட் ஆகும்.
உடலில் உள்ள வெப்பம் நாம் உட்கொள்ளும் உணவின் விளைவுகளாலும், நமது உடலை பாதிக்கக்கூடிய
அக்கறையற்ற நமது செயல்களாலும் பாதிக்கப்படும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது
உடல் தானாகவே வெப்ப நிலையை குறைத்தும் வெப்பநிலை குறைந்து காணப்படும் பொழுது அதிகப்படுத்தியும்
கட்டுக்குள் கொண்டுவரும். இவ்வாறான உடலின் தன்னிச்சையான செயல்பாடுகளிலேயே குறைபாடு
ஏற்படுவோரும் உள்ளனர். அவர்களுக்கான நோய்களின் தாக்கம் வேறாகும்
இந்த வெப்பநிலை பாராமரிப்பில் மிகையினும்
குறையினும் நோய்காணும். எனவே தான் நம் முன்னோர்கள் வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து
தலைமுழுகுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வெப்பநிலை என்று வரும் பொழுது புற உடலில் நம்மால்
அறியப்படும் வெப்பநிலை மட்டுமல்ல, உடலின் மிகுந்த வெப்பம் மற்றும் கணச்சூட்டு உடலினர்க்கு
உடலின் உள்ளுறுப்புக்களுக்கும் வெப்பத்தாக்கம் ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் மிகுந்த வெப்பநிலையுடன்
காணப்படும். உதாரணமாக வழக்கமாக பலர் வயிறு இறுக்கி அல்லது இழுத்து பிடித்து வலிப்பதாக
கூறுவர். இதற்கு குடலில் மிகுந்து காணப்படும் வெப்பநிலையும் ஒரு காரணம். இது போன்று உடல் உள்ளுறுப்புக்களில் வெப்பம் மிகுந்து
போனால் அதை தணிப்பதற்கு நம் முன்னோர்கள் வாழ்வியலில் ஒரு அங்கமாகவே கடைபிடித்த எண்ணெய்
முழுக்கு ஒரு சிறந்த முறையாகும். மேலும் எண்ணெய் முழுக்கு முடித்த அன்று அந்த நபர்
அன்று உண்பதற்கான உணவையும் திட்டமிட்டு செய்வர். இதுபோல் எண்ணெய் வைத்து தலைமுழுக்கின்
பலன்களை மேலும் விவரிக்க இயலும். ஆனால் இன்றோ நம்முள் பலரும் இதை கடைபிடிப்பதில்லை.
இவ்வாறு உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க நாம்
செய்ய வேண்டியவற்றை தினசரி செய்ய வேண்டியது, வாராந்திர முறையாக செய்ய வேண்டியது, மாதந்தோறும்
செய்ய வேண்டியது, வருடந்தோறும் செய்ய வேண்டியது என சித்தர் பெருமக்கள் வரையறை செய்து
தந்துள்ளனர்.
எனவே உடல் ஆரோக்கியம் என்பது அளவான உணவு,
உடலின் இயல்பு நிலையை பராமரிக்க உடலுக்கு துணை செய்தல் மற்றும் உடலின் செயல்களில் மிக
முக்கியமானதான கழிவு நீக்கம் போன்றவற்றில் நாம் அக்கறை காட்ட வேண்டியதன் அவசியமே நாளைக்கு இருமுறை, வாரத்திற்கு இருமுறை, வருடத்திற்கு இருமுறை என்பனவாம். இவ்வாறு உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதன்
மூலம், நம் உடலை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அது உடலில் உயிரின் இயக்கத்தை
வளமாக வைத்திருக்கும். எனவேதான் திருமூலர் அவர்களும்
உடம்பார்
அழியில் உயிரார் அழிவர்
திடம்பட
மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்
உடம்பை
வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்று இந்த உடலை
நோய்தாக்காமல் காக்க வேண்டியது ஒவ்வொரு மனிதரின் அத்தியாவசிய கடமை என்றும் அது மெய்ஞ்ஞான
வாழ்விற்கு அடிகோலும் என்றும் திடம்பட உரைக்கின்றார், சித்த புருஷர் மகான் திருமூலரின்
இந்த அருளாணையை நாம் கடைபிடித்து ஆரோக்கிய வாழ்வை பெறுவோம்
அடுத்த இதழில் சந்திப்போம்
கேஎஸ்பி ஹரிவிஷ் வர்ஷன்
Harvish Varshan KSP.
About the writer:
Being a chemistry graduate, Harvish Varshan KSP, pursued his interest in the field of Siddha. And his continuous research in siddha enabled him to serve the society with his expertise and experience with his in-depth knowledge about the health. Though in later phase of life, he juggled with his job of database administrator, traning the trainers, he didnt let off his interest in the Siddha. Through his sustained interest, he is now publishing his thoughts of current lifestyle in the newly formed and published adhaan magazine, a monthly publication.
Comments