ஊடக நெறிமுறை மற்றும் ஊடக தணிக்கை
சமீப காலங்களில் “பரபரப்பு” நிகழ்வுகளை ஊடகங்கள் கையாளும் விதம் கவலையுறச் செய்கிறது மற்றும் கண்டனத்தை தெரிவிக்கின்ற வரையறைக்குள் மெல்ல மறைகின்றன. முறையான சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து அல்லது அமைப்பிடமிருந்து தகவல்கள் பெறாமலேயே தவறான செய்திகளை வெளியிடுவது ஒருபுறம். ஒரு நிகழ்வு இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது இதற்கு ஒரு முடிவான நிகழ்பு இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ந்து விடும் என்கிற மனிதாபிமானத்தை முற்றிலுமாய மழுங்கடிக்கக்கூடிய வகையில், அந்த நிகழ்வு எப்போது நிகழும் என்றும் அல்லது அந்த நிகழ்வைப் பற்றிய பரவலான கருத்துகளைப் பரப்புவது போன்ற செயல்களில் மறைமுகமாக ஈடுபடுத்தக்கூடிய நேரலைகள் மறுபுறம். நன்றாக இருப்பவர் எதிர்பாராதவிதமாக உடனடியாக மரணிப்பதும் இயற்கை. உடல்நலம் குன்றி சிகிச்சை பலனளிக்காமல் வீட்டிலோ மருத்துவமனையிலோ தவறிவிடுவதும் இயற்கைதான். அதிகப்படியான வயது காரணமாக உடல்நிலை படிப்படியாக குறைந்து, தசைகள் சுருங்கி, உடல்உறுப்புகள் ஒவ்வொன்றாய் ஓய்வெடுத்துக் கொண்டு, இறுதியாக மரணமடைவதும் இயற்கைதான். மனிதத் தவறுகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து மரணங்களும் இயற்கைதான்.
பிறக்கும்பொழுதே ஒரு குழந்தையின் மீது வெளிச்கம் விழுவதே ஒரு கலாச்சாரமாகிவிட்டது. முதல் தடவையாக நடந்த திருமணமோ, மணமுறிவு ஏற்பட்டு இருவருக்கும் அது இரண்டாவது திருமணமோ, எது எப்படியிருப்பினும் அவர்களின் குழந்தை பிறந்த உடனே அல்ல அல்ல கருவுற்ற காலத்திலிருந்தே செய்திகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் செயல்கள் ஊடகத்தினரால் ஆவணப்படுத்தப்படுகின்றன.
ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறாள், அல்லது ஒரு குழந்தை வன்புணர்வுக்கு பலியாகிறாள். இது ஒருநாள் ஒரு செய்தி அல்ல. பின்வரும் நாள்களில் அல்லது மாதங்களில் ஒட்டுமொத்தமாக எந்தெந்த ஊர்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவோ அதெல்லாம் தொடர்ந்து செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அந்த அறிக்கை, அவரின் வாக்குமூலங்கள் வெளிவருகின்ற அதே வேளையில் அவருக்கு தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்பட்டதா,சட்டப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா என்பது போன்ற விவரங்கள் தொடர் செய்திகளாக வருவதில்லை. நாளிதழ்கள் படித்த காலம் போய் இன்று அனைத்தும் மின்னணு செய்திகளாகிவிட்டன. இவ்வாறு செய்திகளைத் தருவதால் அது எவ்வாறான எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்பது போன்ற அலசல்கள் நிகழ்வதேயில்லை. அனைவரும் இந்த செய்திகளை, இதுபோன்ற செய்திகளைப் படிக்க வேண்டும் என்பதான வியாபாரம் முன்னிறுத்தப்படுகிறது.
பதிவேற்ற செய்திகளே இல்லையென்பதுபோல் 15 நாட்களுக்கு ஒருமுறை அதே செய்திகளை மறுபடியும் பதிவேற்றுவது அல்லது பதிவேற்றிய செய்தியை 15 நாட்களுக்கு மாற்றாமலேயே வைத்திருப்பது போன்ற நிகழ்வுகளும் உள்ளன.
ஆரம்ப வரிகளையே இறுதியிலும் பதிவிடுகிறேன் ஊடகநெறிமுறை ஊடக தணிக்கை.
Comments